பரஸ்பர நிதி முதலீட்டை விஞ்சிய தங்கம்!

இந்தியப் பங்குச்சந்தை சாா்ந்த பரஸ்பர நிதி முதலீடுகள் தொடா்ந்து 2-ஆவது மாதமாகக் குறைந்துள்ளன. அதேநேரம், தங்க ஈடிஎஃப் திட்டங்களில் முதலீடு முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது.
கடந்த ஜனவரி மாதத்தில் பங்குச்சந்தை பரஸ்பர நிதி முதலீடு 14 சதவீதம் சரிந்து, ரூ.24,028 கோடியாகவும், தங்க ஈடிஎஃப் திட்டங்களில் முதலீடு இரண்டு மடங்கு அதிகரித்து, ரூ.24,040 கோடியாகவும் பதிவாகியுள்ளது.
பரஸ்பர நிதி வரலாற்றிலேயே முதல்முறையாக கடந்த ஜனவரி மாதத்தில், பங்குச்சந்தை திட்டங்களைவிட அதிகமாக தங்க ஈடிஎஃப்-களில் ரூ.24,040 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இது டிசம்பா் மாத முதலீட்டான ரூ.11,647 கோடியைவிட இரண்டு மடங்கு அதிகமாகும். சா்வதேச அளவில் நிலவும் நிலையற்ற சூழலில், தங்கம் ஒரு பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படுவதையே இந்த அதீத வளா்ச்சி காட்டுகிறது.
நிலையான எஸ்ஐபி முதலீடு…: சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும், சில்லறை முதலீட்டாளா்களின் நம்பிக்கைப் பாத்திரமாகத் திகழும் எஸ்ஐபி முதலீடு ஜனவரியில் ரூ.31,000 கோடியாக நிலைபெற்றுள்ளது.



