முதியோருக்கு ரூ. 2,000; கல்விக் கடன் ரத்து; 3 சிலிண்டர்கள் இலவசம்! அதிமுக வாக்குறுதி!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகவிருக்கும் நிலையில், அதிமுகவின் இரண்டாம் கட்ட வாக்குறுதிகள் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததாவது:
“அதிமுக ஆட்சிக்கு வந்தால் முதியோர் ஓய்வூதியத் தொகை ரூ. 2000 ஆக உயர்த்தப்படும். கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற பெண்களுக்கான மாத உதவித் தொகை ரூ. 2000 ஆக உயர்த்தப்படும்.
மேலும், மாணவர்களின் வங்கிக் கல்விக் கடன் ரத்து செய்யப்படும். அனைத்து குடும்பங்களுக்கும் ஆண்டுக்கு 3 சமையல் சிலிண்டர்கள் இலவசமான வழங்கப்படும்.
ஜல்லிகட்டில் உயிரிழப்போரின் குடும்பங்களுக்கு நிவாரணமாக ரூ. 10 லட்சமும், காயமடைந்தோருக்கு ரூ. 2 லட்சமும் வழங்கப்படும்.
மாற்றுத் திறனாளிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.



