முகப்பு ›
உள்ளூர் செய்திகள் › ஏசி காப்பர் குழாய் திருடன் கைது
உள்ளூர் செய்திகள் ஏசி காப்பர் குழாய் திருடன் கைது
ஓராண்டாக தாம்பரம் புறநகரை அலறவிட்ட ஏசி காப்பர் குழாய் திருடன் சிசிடிவி காட்சியால் சிக்கினான்
சென்னை புறநகர் பகுதியான பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர்,குரோம்பேட்டை, குன்றத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஓராண்டாக மர்ம நபர் ஒருவர் தொடர்ந்து ஏசி காப்பர் குழாய்களை வெட்டி திருடிச் செல்லும் சம்பவம் நடந்து வந்தது.
குறிப்பாக மழைக்காலங்களில், ஏசி பயன்பாட்டில் இருக்கும் போது, வீடுகள் மற்றும் கம்பெனிகளின் வெளிப் புறத்தில் உள்ள கம்ப்ரஸர் காப்பர் ஒயர்கள் திருடப்பட்டு வந்தன. இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் அந்தந்த காவல் நிலையங்களில் புகார் அளித்தனர்.
ஏசி காப்பர் குழாய்களை திருடுவது என்பது திருடுபவரின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என தெரிந்தும் தைரியமாக காப்பர் குழாய்களை கட் செய்யும் போது கம்ப்ரஸரில் இருந்து அதிக அழுத்தத்துடன் கேஸ் வெளியேறும். இதனால் காயம், மூச்சுத்திணறல் ஏற்படும் அபாயம் உள்ளது.
சத்தம் கேட்காமல் இருக்க மழை பெய்யும்போது திருடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அப்போதுதான் கேஸ் வெளியேறும் சத்தம் வெளியில் கேட்காது என்பதற்காக மழை நேரத்தை தேர்வு செய்வதாக தொடர்ந்து திருட்டுச் சம்பவங்களில் ஈடுபடுகின்றனர்
இந்நிலையில் பொதுமக்கள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்த நிலையில், பல இடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது ஒரே நபர்தான் புறநகர் முழுவதும் காப்பர் வயர் திருட்டில் ஈடுபட்டு வருவது தெரிய வந்தது.
சமீபத்தில் பம்மல் பகுதியில் ஒரு வீட்டில் திருடன் காப்பர் வயரை கட் செய்தபோது, கம்ப்ரஸரில் இருந்து கேஸ் பயங்கர சத்தத்துடன் வெளியானதால், அலறி அடித்து ஓடிய காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது. அந்த காட்சி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த சிசிடிவி காட்சியில் திருடன் வந்த இருசக்கர வாகனத்தின் பதிவெண்ணை வைத்து விசாரித்தபோது, அது கடப்பேரி பகுதியை சேர்ந்த ஒருவரது வாகனம் என தெரிய வந்தது. அவரிடம் விசாரித்தபோது அவர் ஏற்கனவே வேறு குற்றச் சம்பவத்தில் சிறை சென்றவர் என தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து நடத்திய தீவிர விசாரணையில், மேற்கு தாம்பரம், திருநீர்மலை, காந்தி நகர் பகுதியை சேர்ந்த முத்துமணி என்கிற பிரவீன் என்பவர்தான் இந்த திருட்டில் ஈடுபட்டு வருபவர் என தெரிய வந்தது.
பிரவீனை கைது செய்ய போலீசார் அவரது வீட்டுக்கு சென்ற போது, அவர் நள்ளிரவு மட்டும் வீட்டுக்கு வந்து விட்டு அதிகாலையே சென்று விடுவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் நள்ளிரவு வரை அவரது வீட்டருகே காத்திருந்து, வீட்டுக்கு வந்த பிரவீனை மடக்கி பிடித்து சங்கர் நகர் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.
விசாரணையில் பிரவீன் அளித்த வாக்குமூலத்தில் சரிவர படிப்பு வராததால் பாதியில் படிப்பை நிறுத்தி விட்டு ஏசி பழுது பார்க்கும் நபருடன் சேர்ந்து சிறிது நாட்கள் வேலை செய்துள்ளார். அப்போது ஏசி பழுது பார்ப்பதை கற்றுக் கொண்டவர், பின்னர் ஏசி பழுது பார்க்காமல் இரவு நேரத்தில் காப்பர் வயரை கட் செய்து விட்டு, மறுநாள் காலை அதே வீட்டிற்கு ஏசி பழுது பார்க்க செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
இதன் மூலம் இரண்டு விதமாக பணம் பார்த்துள்ளார். திருடிய காப்பர் வயர்களை பழைய இரும்பு கடையில் விற்று, அதில் வரும் பணத்தில் போதை பொருள் வாங்கி பயன்படுத்தி வந்ததும் ஜாலியாக நண்பருடன் சுற்றித் திரிவது தெரிய வந்தது. போலீசார் வருவார்கள் என தெரிந்து வீட்டில் ஆள் இல்லாமல் தலைமறைவாகவே இருந்து வந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து போலீசார் காப்பர் வயர்களை பறிமுதல் செய்து, பிரவீன் மீது வழக்குப் பதிவு செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
ஓராண்டாக போலீசில் சிக்காமல் பல இடங்களில் ஏசி காப்பர் திருட்டில் ஈடுபட்டு வந்த கில்லாடி பிரவீன் சிறைக்கு சென்ற சம்பவம் அப்பகுதி பரபரப்பு ஏற்பட்டது.



