"நாங்கள் பேச்சுவார்த்தை நடத்த உத்தேசிக்கவில்லை": அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையை ஈரான் நிராகரித்தது.

பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக வெள்ளை மாளிகை கூறியதைத் தொடர்ந்து, ஈரான் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிடவில்லை என்றும், தொடர்ந்து போரிடவே விரும்புகிறது என்றும் ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்தார்.
"தற்சமயம், எதிர்ப்பைத் தொடர்வதே எங்கள் கொள்கை," என்று அராக்சி அரசு தொலைக்காட்சியில் கூறினார். மேலும், "நாங்கள் பேச்சுவார்த்தை நடத்த விரும்பவில்லை - இதுவரை எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை, எங்கள் நிலைப்பாடு முற்றிலும் கொள்கை ரீதியானது என்று நான் நம்புகிறேன்," என்றும் அவர் கூறினார்.
"இப்போது பேச்சுவார்த்தைகளைப் பற்றிப் பேசுவது தோல்வியை ஒப்புக்கொள்வதாகும்," என்றும் அவர் கூறினார். வெளிப்படையான திட்டம் குறித்துப் பேசிய அராக்சி, "இவை பல்வேறு யோசனைகளின் வடிவில் முன்வைக்கப்பட்டன, அவை அனைத்தும் நாட்டின் மூத்த அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளன, மேலும் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால், அது நிச்சயமாக முடிவு செய்யப்படும்" என்றார். போருக்கு நிரந்தர முற்றுப்புள்ளியும், சேதங்களுக்கு இழப்பீடும் அமெரிக்கா வழங்க வேண்டும் என்றார்.
"நட்பு நாடுகள் மூலமாகவோ அல்லது குறிப்பிட்ட சில தனிநபர்கள் மூலமாகவோ செய்திகள் பரிமாறப்பட்டு வருகின்றன," என்று அராக்ச்சி கூறினார். இருப்பினும், "இதை உரையாடல் என்றோ அல்லது பேச்சுவார்த்தை என்றோ அழைக்க முடியாது," என்றும் அவர் திட்டவட்டமாகக் குறிப்பிட்டார்.
ஐ.நா. பாதுகாப்பு சபையால் அங்கீகரிக்கப்பட்ட பாதுகாப்பு உத்தரவாதங்களை ஈரானால் பெற முடிந்தாலும், போரை அது கையாண்ட விதத்தின் மூலமாகவே டெஹ்ரான் தனக்கான சொந்த பாதுகாப்பு உத்தரவாதங்களை உருவாக்கிக்கொண்டதாக வெளியுறவு அமைச்சர் மேலும் தெரிவித்தார். மேலும்,
"இந்தப் போரின் மூலம், இஸ்லாமியக் குடியரசை யாராலும் சீண்ட முடியாது என்பதை நாங்கள் உலகிற்கு உணர்த்தினோம். சொல்லப்போனால், எங்களுக்கென ஒரு பாதுகாப்பு அரணை நாங்களே உருவாக்கிக்கொண்டோம்; இதன் மூலம், இஸ்லாமியக் குடியரசைச் சீண்டுவதும், எங்கள் நலன்களுடன் விளையாடுவதும் மிகக் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை ஒட்டுமொத்த உலகமும் புரிந்துகொண்டது."என்றார். மேலும், ஹார்முஸ் நீரிணை எதிரி நாடுகளுக்கு நிச்சயம் திறக்கப்படாது. அவர்களுக்கு சரியான பாடம் புகட்டுவோம் என்றார்.



