மாணிக்கம் தாகூரை கடுமையாக கண்டித்த காங்கிரஸ் தலைமை?

தொடர்ந்து திமுக-வுக்கு எதிரான கருத்துகளை தெரிவித்துவந்த காங்கிரஸ் கட்சியின் மக்களவைக் கொறடா மாணிக்கம் தாகூரை காங்கிரஸ் தலைமை கண்டித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது .
மாணிக்கம் தாகூரும் காங்கிரஸ், நிபுணர்கள் மற்றும் தரவு பகுப்பாய்வுக் குழுவின் தலைவருமான பிரவீன் சக்கரவர்த்தி ஆகியோர், திமுக-வை சங்கடப்படுத்தும் விதமாக தொடர்ந்து கருத்துகளை தெரிவித்து வந்தனர். இதனால் திமுக - காங்கிரஸ் கூட்டணிக்குள் புகைச்சல் ஏற்பட்டது. இதன் உச்சமாக, மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய மாணிக்கம் தாகூர், "நீங்கள் செய்த தவறுகளுக்காகப் நாங்கள் பழியைச் சுமந்திருக்கிறோம்" என மறைமுகமாக திமுக-வை சாடியது கூட்டணிக்குள் மேலும் புயலைக் கிளப்பியது.
இதையடுத்து, “கூட்டணிக்கு பாதகம் உண்டாக்கும் விதமாக யார் பேசினாலும் அது தவறுதான்” என கண்டித்த தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பெங்களூருவில் மல்லிகார்ஜூன கார்கேவை நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது, கட்சி மேலிட உத்தரவை மீறிப் பேசி வரும் மாணிக்கம் தாகூர் மற்றும் பிரவீன் சக்கரவர்த்தி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விரிவான அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்தார். இதற்கிடையில், காங்கிரஸ் தலைமையைத் தொடர்பு கொண்ட திமுக மேலிடம், சர்ச்சைக்குரிய வகையில் பேசி வரும் காங்கிரஸ் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கு வருவோம் எனத் தெரிவித்ததாகவும் ஒரு தகவல் வெளியானது.
இந்த நிலையில் நேற்று முன் தினம் சென்னை வந்த காங்கிரஸ் கட்சியின் அமைப்புப் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், “கூட்டணி ஆட்சி குறித்து கட்சியில் இருக்கும் தனிநபர்கள் யாராவது கருத்துச் சொன்னால், அது அவர்களது சொந்தக் கருத்தே தவிர, அதற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. கூட்டணி மற்றும் அதன் முடிவுகள் குறித்து அகில இந்தியத் தலைமை மட்டுமே இறுதி முடிவெடுக்கும்” எனத் தெளிவுபடுத்தினார்.



