டிவி செய்தி வாசிப்பாளர் வீட்டில் நகை திருட்டு
சென்னை ஓட்டேரி பிரிசிலி நகர் மலையப்பன் தெருவைச் சேர்ந்தவர் பசுமதி (53). இவர் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் செய்திப்பிரிவில் தயாரிப்பாளராக பணியாற்றி வருகிறார்.
திருமணம் ஆகாத பசுமதி, தனது அக்காள் பவானியுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் பசுமதி வீட்டில் தண்ணீர் வராததால், வீட்டை பூட்டி விட்டு அருகில் வசிக்கும் தனது சகோதரர் வீட்டுக்கு தூங்கச் சென்றார்.
பின்னர் நேற்று காலை பசுமதி வீட்டுக்கு வந்தபோது, கதவு உடைக்கப்பட்டு இருந்தது. பீரோவும் உடைக்கப்பட்டு, அதிலிருந்த 10 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.70 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு போயிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் புளியந்தோப்பு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.



