தமிழ்நாடு முதலீடுகள் செயலாக்க மாநாட்டை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சென்னை: ரூ.36,968 கோடி முதலீட்டில் 60,823 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில், 71 புதிய திட்டங்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இன்ரு அடிக்கல் நாட்டினார். மேலும், 52 முடிவுற்ற திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார்.
தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் இன்று நடைபெற்ற புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயலாக்க மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது ரூ.36,968 கோடி முதலீட்டில் 60,823 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் 71 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய அவர், ரூ.31,934 கோடி மதிப்பிலான 52 முடிவுற்ற திட்டங்களையும் தொடங்கி வைத்தார். மேலும், ரூ.5,000 கோடி முதலீடு மற்றும் 5,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில் 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிகழ்ச்யில் பேசிய முதல்வர் ஸ்டாலின், '' ஒரு தொழில் நிறுவனமோ, தொழிற்சாலையோ, தங்களுக்கான மாநிலத்தை எப்படி தேர்ந்தெடுப்பார்கள் என்றால், அந்த மாநிலம் தங்களுக்கான வாய்ப்புகளை பெரிய அளவில் உருவாக்கித் தருமா? சொன்ன நேரத்தில், தங்களால் உற்பத்தியை தொடங்க முடியுமா? என்று பார்த்துதான், மாநிலங்களை தேர்ந்தெடுப்பார்கள்.
தொழில் நிறுவனங்கள் - தொழிற்சாலைகள் - தொழில் முனைவோர் – தொழிலாளர்கள் என்று எல்லோருக்கும் நம்பிக்கை அளிக்கக்கூடிய மாநிலமாக நமது தமிழ்நாடு இருக்கிறது. கையெழுத்தான ஒப்பந்தம் செயல்படுத்தப்பட்டு நிறுவனமாக மாறுவது, பிறகு நம்முடைய இளைஞர்களுக்கு பணி ஆணை சென்று சேருவது என ஒவ்வொன்றாக பார்த்து பார்த்து தமிழக அரசு உறுதி செய்கிறது.
இங்கே சமூகநீதியும் நிலை பெறவேண்டும், தொழில் வளர்ச்சியும் உறுதி செய்யப்பட வேண்டும். அப்போதுதான், ‘எல்லார்க்கும் எல்லாம்’ - ‘அனைத்து மாவட்ட வளர்ச்சி’ என்ற இலக்கை அடைய முடியும் என்பதில் நாங்கள் மிக கவனமாக செயல்பட்டு கொண்டிருக்கிறோம்.
2030-ஆம் ஆண்டிற்குள் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைய வேண்டும் என்ற இலக்குடன் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது'' என முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்.



